search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது
    X

    முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட வன ஊழியர்கள்

    தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது

    • யானை கணக்கெடுப்பு பணியானது 3 முறைகளை பின்பற்றி நடக்கிறது.
    • நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.

    கோவை:

    தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில வனப்பகுதிகளில் அதிகளவிலான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனப்பகுதிகளில் எத்தனை யானைகள் உள்ளன என்பதை அறிய வனத்துறையினர் கணக்கெடுப்பினை நடத்தி வருகின்றனர்.

    வழக்கமாக ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக கணக்கெடுப்பினை நடத்தி தங்கள் மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் எத்தனை யானைகள் உள்ளன என்ற விவரத்தை அறிவிப்பாக வெளியிட்டு வருகிறது.

    தற்போது முதல் முறையாக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கி தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

    இந்த பணியானது இன்று காலை 4 மாநில வனப்பகுதிகளிலும் தொடங்கியது. இன்று தொடங்கிய பணியானது வருகிற 19-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    தமிழகத்தில் கோவை, நீலகிரி வனக்கோட்டங்களில் இன்று காலை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

    கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, கோவை, போளுவாம்பட்டி, மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய 7 வனசரகங்களில் 42 இடங்களில் இந்த பணியானது நடந்தது.

    இதேபோல் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    இந்த பணியில் வனச்சரக அலுவலர்கள், வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியை சேர்ந்த இளங்கலை வனவியல் மாணவர்கள் என பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று யானைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    யானை கணக்கெடுப்பு பணியானது 3 முறைகளை பின்பற்றி நடக்கிறது. முதல் நாளில் நேரடியாக சென்று யானைகளை கணக்கெடுத்தல், 2-வது நாளான நாளை யானையின் சாணத்தை வைத்தும், 3-வது நாளில் நீர்நிலை பகுதிகளிலும் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவை, நீலகிரி வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. யானைகளின் சாணம், கால்தடம், நீர்நிலைகளுக்கு அருகே அவை வந்து செல்வது உள்ளிட்டவையும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு சென்று கண்காணித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×