

திருப்பூர்:
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடுக்கு புறப்பட்டு சென்ற தனியார் பஸ் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 கல்லூரி மாணவர்கள் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்லும் வேகத்தின் அளவை கண்காணிக்கவும், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கிறார்களா? என்பதை ஆய்வு செய்வதற்காகவும் போக்குவரத்து கழகம் தனி குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும் விபத்து அபாயம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த இடங்களில் மிகுந்த கவனமுடன் அரசு பஸ்களை இயக்க, டிரைவர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளார்கள்.
அரசு பஸ்கள் விபத்தில் சிக்காமல் இயக்குவதற்கு, அரசு போக்குவரத்து கழகம் தீவிரம் காட்டி வருகிறது. முக்கிய வழித்தடங்களில் விபத்துகள் நிகழ வாய்ப்புள்ள, அபாயமுள்ள பகுதிகளை கண்டறிந்து, அதன் விபரத்தை டிரைவர்களுக்கு தெரிவித்து, கவனமுடன் பஸ்களை இயக்க அறிவுரை மற்றும் விழிப்புணர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து கழக உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,
தனியார் பஸ்களின் வேகம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை கண்காணிக்கும் வகையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து கழகம் சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பஸ்களின் வேகம் மற்றும் கூடுதல் பயணிகள் ஏற்றி செல்லப்படுகிறதா என்பதை கவனித்து சம்பந்தப்பட்ட பஸ்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலை, மாநில மற்றும் புறநகர சாலை சந்திப்புகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்கள் குறித்த விபரத்தை, கோட்டம் மற்றும் கிளை அளவில் சேகரித்து அதை வரை படமாக்கி, இதற்கு முன் விபத்து ஏற்பட்டதற்கு யார் காரணம் உள்ளிட்ட விபரங்களை டிரைவர்களுக்கு விளக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்கு வரத்து கழக அதிகாரிகளுடன் இணைந்து இப்பணியை உடனே மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பஸ் இயக்கத்தின் போது டிரைவர், நடத்துனர் செய்யும் தவறுகளை தடுக்கவும், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், தொடர்ந்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் எந்தெந்த பாதையில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதற்காக, விபத்து அபாயம் உள்ள பகுதியை கண்டறிந்து கவனமுடன் பஸ்களை இயக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.