கந்துவட்டி கொடுமையால் அ.தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடும்பத்துடன் தீ குளிக்க முயற்சி

சேலத்தில் கந்துவட்டி கொடுமையால் அ.தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 2 மகள்களுடன் பெற்றோர் தீ குளிக்க முயற்சி செய்தனர்.
தீக்குளிக்க முயன்ற இளங்கோவன் குடும்பத்தினர்.
தீக்குளிக்க முயன்ற இளங்கோவன் குடும்பத்தினர்.
Published on

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர்  இளங்கோவன். இவரது மனைவி ரமாபிரபா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இளங்கோவன்- ரமாபிரபா தம்பதி தங்களது 2 மகள்களுடன் இன்று காலையில் மனு கொடுப்பதற்காக சேலம் மாவட்ட கலெக்டர் அலுவல கத்திற்கு வந்தனர்.

அப்போது கலெக்டர் அலுவலகம் அருகில் திடீரென கையில்  கொண்டு வந்த கேனில் இருந்த  மண்எண்ணையை எடுத்து 4 பேரும் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

 அப்போது இளங்கோவன், போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறியதாவது:-

தொடர்ந்து வட்டியை கட்டி வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் சரிவர வட்டியை கட்ட முடியவில்லை. அசல் தொகையை கட்டிய பிறகும் வட்டித் தொகை கட்டவில்லை என்று அ.தி.மு.க. பிரமுகர்  மற்றும் அவரது மகன் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்து அடிக்கடி தொல்லை கொடுத்து வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு வீட்டிற்கு வந்து எனது  மகளை தகாத வார்த்தையில் திட்டி மிரட்டினர்.

இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து எனது மகள்  முதல்-அமைச்சர் தனிப் பிரிவிற்கு இது குறித்து மனு அனுப்பினார்.

இதை அறிந்த அதிமுக பிரமுகர் மற்றும் அவரது மகன் ஆகியோர் வீட்டிற்கு வந்து முதல்-அமைச்சரிடமே புகார் தெரிவிக்கிறாயா என கூறி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மன வேதனை தாங்க முடியாமல் வாழ்வதை விட இறப்பதே மேல் என நினைத்து இன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com