

தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகில் உள்ள பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமணி. இவருடைய மகள் செல்வி.
இவரை கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூர் அருகில் உள்ள கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த விஜயன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்விக்கு தாரமங்கலம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஸ்ரீதர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பரிதாபமாக இறந்தார் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் சேடபட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென மயக்கம் அடைந்த செல்வியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் விஜயன் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அறிந்த அவரது தந்தை ரமணி நேரில் சென்று தனது மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதார்.
பின்னர் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவர் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், செல்வி எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.