

வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த கல்வராயன்மலை கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 20). இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இேதபோல் கருமந்துறை பகுதியை சேர்ந்த சடைச்சி (50) என்பவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கி ருந்து 5 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போனையும் திருடி சென்றனர்.
இது குறித்து புகாரின் பேரில் கருமந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து தங்க நகை திருடும் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சைபர்கிரைம் ேபாலீசார் உதவி நாடப்பட்டது.
சடைச்சி என்பவரது வீட்டில் திருடப்பட்ட செல்போன் ஐ.எம்.ஐ. எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அந்த செல்போன் கல்வராயன் மலை கிணத்தூர் பகுதியை சேர்ந்த தனபால் (28) மற்றும் அவரது மனைவி சசிகலா(20) ஆகிய இருவரிடமும் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரை யும் பிடித்து விசாரித்ததில் இருவரும் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து திருடியது தெரியவந்தது.
இத்தம்பதி மீது திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். சசிகலாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீடு புகுந்து நகை திருடிய தம்பதியை அவர்கள் திருடிய செல்போனே காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.