என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பழனி அருகே ரூ.33 லட்சம் மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு
- கோவிலுக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
- நிலங்கள் மதிப்பு சுமார் ரூ.33 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழனி:
பழனியை அடுத்த தாளையூத்து கிராமத்தில் ஆக்கிரமிப்பிலிருந்த அங்கா ளம்மன் கோவிலுக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தாளையூத்து கிராமத்தில் அங்காளம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தன.
அதே போல் வேலு சமுத்திரம் செங்கழுநீரம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தன. இதையடுத்து திண்டுக்கல் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் தக்கார் ராமநாதன், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) விஜயலட்சுமி, பழனி சரக ஆய்வாளர் கண்ணன், வேடசந்தூர் சரக ஆய்வாளர் ரஞ்சினி, ஆய்வர் அலுவலக உதவியாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் நிலத்தை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்படி தாளையூத்து கிராமம் சர்வே எண் 860/1 இல் 7.05 ஏக்கர், சர்வே எண். 860/2 இல் 7.18 ஏக்கர் மற்றும் வேலுசமுத்திரம் கிராமம் சர்வே எண் 32 மற்றும் 31/10 இல் 11.72 ஏக்கர் என மொத்தம் 25.95 ஏக்கர் நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்தி எச்சரிக்கை பதாகைகளை வைத்தார்.
ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலங்கள் மதிப்பு சுமார் ரூ.33 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






