குடிநீர்-பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

பஸ் வசதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குடிநீர்-பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
Published on

தாளவாடி:

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், தாளவாடி ஒன்றியம், திங்களூர் அ பஞ்சாயத்தில் சேர்ந்த சிக்கநந்தி, டி. பி.தொட்டி, என்.எஸ்.புரம் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சீரான குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்தும் வலியுறுத்தி இருந்தனர். அதேபோல் இந்த பகுதி முறையான பஸ் வசதியும் இல்லாமல் பகுதி மாணவ மாணவிகள் 3 கிலோமீட்டர் தொலைவில் நடந்து சென்று பஸ்ஸில் ஏறி சென்று வருகின்றனர். இங்கு முறையான பஸ் வசதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் பாசகுட்டை என்ற பகுதியில் ஒன்று திரண்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன.

சீரான குடிநீர் வழங்க வேண்டும், கிராமத்துக்குள் பஸ் சென்று வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கடம்பூர் போலீசார் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com