நெல்லை அருகே பழிக்குப்பழியாக கொலை- விவசாயியை கொன்ற கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

கணேசனை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. பழிக்குப்பழியாக கணேசன் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
கணேசன்
கணேசன்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் கணேசன் (வயது 38), விவசாயி. இவர் நேற்று முன்தினம் சேரன்மகாதேவியில் கோர்ட்டு விசாரணைக்கு வந்துவிட்டு, மாலையில் தனது மோட்டார் சைக்கிளில் தருவைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

வெட்டிக்கொலை

அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியம்மாள்(56) என்பவர் கடந்த 24-8-2022 அன்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கணேசனை போலீசார் கைது செய்தனர். அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

தேடுதல் வேட்டை

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுதொடர்பாக கணேசனின் பெற்றோர் அளித்துள்ள மனுவில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 5 நபர்களின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடிச்சென்ற போது அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதனால் அந்த நபர்கள் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் அடைந்து தேடி வருகின்றனர். அதேநேரத்தில் அவர்களது செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளதால் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com