search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெமிலி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்த காட்சி.

    நெமிலி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

    • அங்கன்வாடி மையம், மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் சோதனை
    • பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா, என கேட்டறிந்தார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பனப்பாக்கம், மேலபுலம், துறையூர், வெளிதாங்கிபுரம், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலப்புலம் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்புகளில் ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பழுது நீக்குதல் மற்றும் சீரமைக்கும் பணிகளையும், ரூ.63.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் ரேசன் கடை, அங்கன்வாடி மையம், மேல்நிலை தண்ணீர் தொட்டி, பேவர் பிளாக் சாலை போன்ற பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து, பனப்பாக்கம் பேரூராட்சி தென்மாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் 2 பள்ளி வகுப்பறை கட்டிடம் ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டிலும், ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொடக்கப்பள்ளி சமையல் கூடத்தினையும், நெல்லூர்ப்பேட்டை தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டிடம் ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டிலும், துறையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 பள்ளி வகுப்பறை கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டார்.

    தொடர்ந்து மேலபுலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை துகள் செய்யும் எந்திர மையத்தினையும், வெளிதாங்கிபுரம் ஊராட்சி ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா, விநியோகம் செய்யப்படவுள்ள பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தார்.

    ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சிவராம், உதவிப் பொறியாளர் ராஜேஷ். வட்டாட்சியர் பாலச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×