search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டையில் குடிநீர்-சுகாதார பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
    X

    நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    சுரண்டையில் குடிநீர்-சுகாதார பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

    • குடிநீர்,சுகாதார பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கி நகராட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது.
    • குப்பை வாங்குவதற்காக வந்துள்ள வண்டிகள் சோதனை செய்த பின்பே நகராட்சி பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கரா தேவி முருகேசன், பொறியாளர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் வேல்முத்து நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் 5000 லிட்டர் குடிநீர் தொட்டி உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.

    அதை தொடர்ந்து பேசிய கவுன்சிலர் அமுதா சந்திரன் குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார். கருப்புச்சட்டை அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்ட 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பரமசிவன் தொடர்ந்து தனது வார்டு பகுதியில் எந்தவித பணிகளும் நடைபெறாமல் புறக்கணிக்கப்படுகிறது என்றார்.

    26-வது வார்டு கவுன்சிலர் ஜெயபாலன் குடிநீர் மற்றும் சுகாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்காக 3 மண்டலங்களாக பிரிக்க வேண்டும், மக்கள் பிரச்சினையை தெரிவிப்பதற்காக மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றார்.

    தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர் மாரியப்பன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் பதினைந்தாவது நிதி குழு மானியத்தில் நகராட்சிக்கு வாங்கப்பட்டுள்ள குப்பை வண்டிகளை தரமானதா என சோதனை செய்த பின்னரே பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும், காங்கிரஸ் கவுன்சிலர் பாலசுப்ரமணியம் பேசும்போது, வீடு கட்டுவதற்கான அப்ரூவல் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி தலைவர் வள்ளி முருகன் குடிநீர் பிரச்சினை மற்றும் சுகாதார பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கி நகராட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் துரிதமாக மக்களுக்கு குடிநீர் வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. குப்பை வாங்குவதற்காக வந்துள்ள வண்டிகள் சோதனை செய்த பின்பே நகராட்சி பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும், பாரபட்சமின்றி அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடைபெறும் எனக் கூறினார்.

    Next Story
    ×