search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் தீவிரம்
    X

    ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் தீவிரம்

    • பெரம்பலூர் அருகே வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள திரவுபதி அம்மன் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • தற்போது ராஜகோபுரத்தில் ஐந்து கலசங்கள், 126 சிலைகள், பித்தளை கவசம் பொருத்திய கொடிமரம் என கோவில் பிரம்மாண்டமாக புனரமைக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூர் கிராமத்தில் கி.பி. 1800 களில் கட்டப்பட்ட ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் கால பேக்கில் சிதிலமடைந்தது. இதையடுத்து 2015-ல் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பூர்வாங்கப் பணிகளை தொடங்கினர். ஆனால் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த பணிகள் தடைபட்டன.

    இதனால் செய்வது அறியாமல் திகைத்த ஊர் மக்கள் மற்றும் புனரமைப்பு குழுவினர் அம்மன் வழிகாட்டுதலின்படி பிரபல தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் உதவியை நாடினர்.

    அவரும் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்த இசைவு தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக 2019-ம் புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டு திருக்கடையூர் உலக புகழ்பெற்ற ஸ்தபதி கிருஷ்ணமூர்த்தி இடம் வேலைகளை ஒப்படைத்தனர்.

    பொருட்செலவில் பெரும் பங்கினை தொழிலதிபர் பிரகதீஷ் குமார் ஏற்றுக்கொண்டார். தற்போது ராஜகோபுரத்தில் ஐந்து கலசங்கள், 126 சிலைகள், பித்தளை கவசம் பொருத்திய கொடிமரம் என கோவில் பிரம்மாண்டமாக புனரமைக்கப்பட்டது. இங்கு மூலவராக திரவுபதியம்மன், செல்வ விநாயகர், தர்மராஜா சுவாமிகள் சன்னிதிகள் அமைக்கப்பட்டன.

    அதுமட்டுமல்லாமல் கிருஷ்ணருக்கு தனி சன்னதியும், இஸ்லாமிய அரசர்களில் ஒருவரான முக்தார் ராவுத்த–ருக்கு சிலையும் எழுப்பப் பட்டுள்ளது. கோபுரத்தில் மகாபாரத கதாபாத்திரங்களை நினைவு கூறும் தத்ரூப சிலைகள் எனக்கோவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது.

    இப்போது கோவில் திருப்பணிகள் முழுமை அடைந்ததையடுத்து பூலாம்பாடி ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் ஆலய மகா கும்பாபிஷேக விழா திருக்குட நன்னீராட்டு பெருவிழா வருகிற 6-ந்தேதி வளர்பிறையில் நடக்கிறது.

    நூற்றாண்டை கடந்து நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக நடத்த பூலாம்பாடி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    கும்பாபிஷேகத்தை ஒட்டி வெளியூர், வெளிநாடுகளில் வசித்து வந்த பக்தர்கள் பூலாம்பாடி திரும்பி உள்ளனர். நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

    5-ந்தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜை, பிம்ப சுத்தி பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்துதல், தீபாராதனை ஆகியவை நடத்தப்படுகிறது.

    கும்பாபிஷேகம் நடைபெறும் 6-ந்தேதி (புதன்கிழமை) அன்று அதிகாலை 4:30 மணிக்கு நான்காம் காலை யாக பூஜை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக காலை 6 மணிக்கு மகா பூர்ணாகுதி கும்பங்கள் புறப்பட்டு ஆலயம் வலம் வருதல் நடக்கிறது.

    இதையடுத்து மகா கும்பாபிஷேக விழா காலை 6.45 மணி முதல் 7.25 மணிக்குள் விமானம் ராஜகோபுரம், மூலாலய மூர்த்தி கும்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூலாம்பாடி பேரூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ண மின் விளக்குகளால் கோபுரம் ஜொலிக்கிறது. மேலும் யாகசாலைகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த யாகசாலைகளிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சுற்று வட்டார மக்களும் கோவிலுக்கு வர தொடங்கியுள்ளனர்.

    Next Story
    ×