என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூலிகை மருத்துவ பூங்காவில் ஏராளமான மரங்கள் தீயில் கருகி நாசமாகியது.
பழனி : மூலிகை மருத்துவ பூங்காவில் தீ விபத்து
- பழனி காரமடையில் வையாபுரி குளக்கரையில் மூலிகை மருத்துவ பூங்காவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் அரியவகை மூலிகைகள் எரிந்து நாசமானது.
பழனி:
பழனி காரமடையில் வையாபுரி குளக்கரையில் மூலிகை மருத்துவ பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான அரியவகை மரங்கள் மற்றும் மூலிகைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
பூங்காவிற்குள் தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாததால் போதிய பராமரிப்பின்றி பூங்கா முழுவதும் மரங்களின் கிளைகள் மற்றும் சருகுகள் அதிகமாக குவிந்திருந்தன. இந்தநிலையில் நேற்று வையாபுரி குளக்கரையில் இருந்த குப்பைகளில் பற்றிய தீ மருத்துவ பூங்காவுக்குள் பரவியது.
காய்ந்த இலைகள் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக மளமளவென பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் பூங்காவில் இருந்த மூலிகை செடிகள், மூங்கில் , தேக்கு உள்ளிட்ட ஏராளமான மரங்கள் தீக்கு இரையாகி நாசமாகியது. இந்த சம்பவம் குறித்து பழனி நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல பழனி-கொகடைக்கானல் சாலையில் தேக்கம்தோட்டம் அருகே சாலையோரம் இருந்த சருகுகளில் திடீரென தீப்பற்றியது. தீ பரவி அப்பகுதி முழுவதும் எரிய தொடங்கியது. அந்த பகுதியில் இருந்த விவசாயிகள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.






