search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6 தமிழர்களின் நிலை என்ன? - தமிழ்நாடு திரும்பிய அதிகாரிகள் விளக்கம்
    X

    6 தமிழர்களின் நிலை என்ன? - தமிழ்நாடு திரும்பிய அதிகாரிகள் விளக்கம்

    • ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.
    • பீகார் சென்ற தமிழ்நாடு அதிகாரிகள் ரெயில் விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினர்.

    சென்னை:

    ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசா ரெயில் விபத்தில் தமிழர்கள் யாரேனும் சிக்கினார்களா என்பதை அறியவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கவும் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பீகாருக்கு அனுப்பியது. பீகார் சென்ற தமிழ்நாடு அதிகாரிகள் ரெயில் விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினர்.

    இந்நிலையில், பீகார் சென்ற அதிகாரிகள் அங்கிருந்து நேற்று இரவு சென்னை திரும்பினர். அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    விபத்துக்குள்ளான சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்த தமிழர்களில் 17 பேர் ரெயிலில் ஏறவில்லை. மீதி நபர்கள் அனைவரையும் தமிழ்நாடு அவசர உதவி மையம், ரெயில் போலீஸ், தமிழ்நாடு காவல்துறை என அனைத்து வழிகளிலும் தொடர்புகொண்டு அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துள்ளோம்.

    6 பேரை மட்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை. ஏனென்றால் அவர்கள் கவுன்டர்கள் மூலமாக டிக்கெட் வாங்கி இருந்தார்கள். அவர்களின் மொபைல் எண்கள் கிடைக்கப் பெறவில்லை. எனினும் அவர்கள் பயணித்த ரெயில் பெட்டியில் பயணித்த சக பயணிகளிடம் தொடர்புகொண்டு அந்தப் பெட்டியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துள்ளோம்.

    மருத்துவமனைகளில் 382 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழர்கள் யாரும் இல்லை. எனவே இதுவரை கிடைத்த தகவல்படி தமிழர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். அனைவரும் அவரவர் இடங்களுக்குச் சென்றுள்ளனர். நேற்று மட்டும் ஒரே ஒரு நபர் தனியாக சென்னைக்கு தனி ரெயில் மூலம் காயங்களுடன் வந்தார். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் பத்திரமாக உள்ளனர் என தெரிவித்தனர்.

    Next Story
    ×