search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய கல்விக்கொள்கையால் உயர்கல்விக்கு நிறைய வாய்ப்புகள்: நிர்மலா சீதாராமன்
    X

    பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவருக்கு நிர்மலா சீதாராமன் பட்டத்தை வழங்கி பதக்கம் அணிவித்தபோது எடுத்த படம்.

    புதிய கல்விக்கொள்கையால் உயர்கல்விக்கு நிறைய வாய்ப்புகள்: நிர்மலா சீதாராமன்

    • 2047-ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும்.
    • தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும்.

    சென்னை :

    சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (ஐ.ஐ.ஐ.டி.டி.எம்.) 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    மாணவர் சமூகம் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்களை போட்டி மனப்பான்மையோடு அணுக வேண்டும். அறிவியல் மற்றும் அதன் திறன் மேம்பாடு மிகவும் அவசியம். விவசாயிகளும், ராணுவ வீரர்களும் முன்னேற வேண்டும் என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    அவர் கூறியது போல ஜெய் விஞ்ஞான், ஜெய் கிசான் மற்றும் ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) ஆகியவற்றை நமது குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். விஞ்ஞானிகளும் அவர்களின் ஆராய்ச்சிகளும் நாட்டின் அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிக்கு அவசியம். 2047-ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும். அதற்கு இந்தக் குறிக்கோள்களை நாம் பின்பற்ற வேண்டும்.

    தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். 2026-ல் நமது நாட்டில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை 65 சதவீதமாக அதிகரிக்கும். எனவே நமது நாடு 2047-ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சக்தியாக விளங்கும். உலக அளவில் 58 சி.இ.ஓ.க்கள் இந்தியர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் இந்தியக் கல்வி முறையில் பயின்றவர்கள்.

    சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள 25 சதவீத நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. 100 யூனிகான் நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. இது கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. 760 மெய்நிகர் அறிவியல் ஆய்வகங்கள், திறன் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் இக்கல்வி நிறுவனத்தின் புதிய அரங்குக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். பின்னர் ஏ.ஐ.ஐ.ஓ.டி. ரோபோடிக்ஸ் மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    விழாவில் ஐ.ஐ.ஐ.டி.டி.எம். நிறுவன குழுத் தலைவர் பேராசிரியர் எஸ்.சடகோபன், இயக்குனர் டி.வி.எல்.எம்.சோமயாஜுலு மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×