

நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட அதிக அளவு பெய்தது.
மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 11 அணைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தடுப்பணையும் நிரம்பி வழிந்தது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மீண்டும் பரவலாக மழை பெய்தது. நேற்று இரவு பாபநாசம் அணை பகுதியில் ஒரு மில்லி மீட்டர் அளவுக்கு சாரல் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
வடகிழக்கு பருவமழையின் போது மணிமுத்தாறு அணை 2 முறை நிரம்பி வழிந்தது. ஏற்கனவே கடந்த 2021 ஜனவரி மாதத்திலும் மணிமுத்தாறு அணை நிரம்பி வழிந்ததால், கடந்த ஆண்டு மட்டும் 3 முறை மணிமுத்தாறு அணை நிரம்பி உள்ளது.
இந்த நிலையில் தற்போதும் மணிமுத்தாறு அணைக்கு மழை காரணமாக கூடுதல் தண்ணீர் வந்ததால் இன்று இந்த மழை காலத்தில் 3-வது முறையாக மணிமுத்தாறு அணை நிரம்பி வழிந்தது.
2022 புத்தாண்டில் முதல் முறையாக தற்போது மணிமுத்தாறு அணை நிரம்பி வழிகிறது. இன்று காலை அணைக்கு வினாடிக்கு 944 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நேற்று மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 117.17 அடியாக இருந்தது. இன்று முழு கொள்ளளவான 118 அடியை எட்டி நிரம்பி வழிந்தது.
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,093 கன அடி வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 827 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 134.65 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 140.68 அடியாக உள்ளது.
தொடர்ந்து மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து உள்ளது. அணைகளுக்கு வரும் தண்ணீர் அனைத்தும் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.