மதம் மாறிய ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவரின் சாதி சான்றிதழ் செல்லாது- தேசிய ஆதிதிராவிடர் ஆணையம்

மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ். போலி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்.
அருண் ஹல்தார் 
அருண் ஹல்தார் 
Published on

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹல்தார் தெரிவித்துள்ளதாவது:

ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக அந்த வகுப்பில் இருந்து வெளியேறி விடுகின்றனர். மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது. மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ்.

இதுகுறித்தும் பல புகார்கள் ஆணையத்திற்கு தொடர்ந்து வருகிறது. போலி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட அளவில் குழு அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து 200 புகார்கள் வந்துள்ளன. இதில் 100 வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. இவற்றில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மக்கள் மீது நிகழும் வன்முறைகளில் ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்திலும், தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனி பாதை உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக சமீபத்தில் வந்த புகாரையடுத்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com