

பரமத்தி வேலூர்:
சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தினை முன்னிட்டு பரமத்திவேலூர் பேட்டை திருஞானசம்பந்தர் மடத்தில் உள்ள சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் அனைத்து சிவனடியார்கள் மற்றும் அடியார்கள் கலந்து கொண்டனர்.
நடராஜ பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், தேன், திருமஞ்சனம், மஞ்சள், விபூதி, கரும்புச்சாறு, இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
நடராஜப்பெருமானுக்கு வெள்ளிக்கவசம், சிவகாமி சுந்தரி அம்பாளுக்கு தங்க கவசம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். அவர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா முடிவில் அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது.