பள்ளிப்பாளையம் பகுதியில் ஒரு வாரம் ஜவுளி உற்பத்தி நிறுத்தம்
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் செயல்படுகின்றன.
இவற்றை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும், ஒரு லட்சம் பேர் உள்ளனர். இங்கு சர்ட், வேட்டி, துண்டு, சுடிதார், லுங்கி, உள்ளிட்ட துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. கடந்த 2மாதமாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், துணிகளின் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது.
இதனால் உற்பத்தியாளர்கள் தினமும் அதிகளவு நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். தற்போதைய சூழலில் ஜவுளித் தொழில், மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலே அடியோடு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிப்பாளையம் வட்டார ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்ச ஆலோசனைக் கூட்டம், சங்கத்தலைவர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின் சங்கத்தலைவர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
நூல் விலை உயர்வால், விசைத்தறி தொழில் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. உற்பத்தி செலவு அதிகரித்து விட்டதால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
தொடர்ந்து உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வரும் 16ம் தேதி முதல், 22ம் தேதி வரை ஒருவாரம் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மீட்டருக்கு, 4ரூபாய் உயர்த்தினால் தான் சமாளிக்க முடியும். ஆனால், 2ரூபாய் உயர்த்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

