என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமத்தி வேலூரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசிய காட்சி.
பிரதமர் மோடி விவசாய மக்களின்வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரமத்தி வேலூரில் நேற்று இரவு "என் மண் என் மக்கள்" நடைபயணம் மேற்கொண்டார்.
- பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டனர்.
பரமத்தி வேலூர்:
தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரமத்தி வேலூரில் நேற்று இரவு "என் மண் என் மக்கள்" நடைபயணம் மேற்கொண்டார். அவருடன், பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டனர்.
அப்போது பரமத்திவேலூர் பகுதியில் பழைய புறவழிச் சாலை முக்கோண பூங்கா பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கி அங்கிருந்து நாமக்கல் சாலை, சுல்தான்பேட்டை- மோகனூர் பிரிவு சாலை, பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக நடந்து சென்று பொதுமக்களை அண்ணாமலை சந்தித்தார்.
தொடர்ந்து பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதியின் "என் மண் என் மக்கள்" நடைபயணத்தின் நிறைவாக பரமத்திவேலூர் நான்கு சாலை பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு பொதுமக்கள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் 91 சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் முடித்து பரமத்தி வேலூரில் 92-வது சட்டமன்ற தொகுதி நடைபயணம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு இந்த பாதயாத்திரை நடைபயணம் சென்று வருகிறோம். விவசாய தொழில் நிறைந்த பரமத்தி வேலூரில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஆளும் தி.மு.க. அரசு நிறைவேற்ற வில்லை.
சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு உரிய தொகையினை கூட்டுறவு ஆலைகள் வழங்கவில்லை., பரமத்திவேலூர் பகுதியில் உள்ள வெல்லம், கரும்பு போன்றவற்றை அரசுதுறை நிறுவனங்கள் கொள்முதல் செய்யவில்லை. ரேசன் கடைகளில் நாட்டுச்சர்க்கரை வழங்கவில்லை. கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 4,000 ரூபாயாக இதுவரை உயர்த்தி தரவில்லை.
பரமத்திவேலூரில் இருந்த வெற்றிலை ஆராய்ச்சி நிலையத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். அதனை மீண்டும் பரமத்தி வேலூரிலேயே அமைக்க வேண்டும்.
கவுரவ நிதி
ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்காக பிரதமர் பயிர் காப்பீடு, மண் வள அட்டை, விவசாயிகள் கடன் அட்டை, விவசாயிகள் கவுரவ நிதி, பாசன வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி அரசு விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தி.மு.க. அரசு தமது சுய லாபத்திற்காக கொண்டு வந்த சட்ட மசோதாக்களுக்கு தான் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லையே தவிர, அவர் வேண்டுமென்ரே எந்த கோப்புகளையும் கிடப்பில் போடவில்லை என்பதை முதல்- அமைச்சர், அமைச்சர்கள் உணர வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ற இலக்கை நிர்ணயித்து இதுவரை 8.50 லட்சம் மேற்பட்டோருக்கு, ரோஜ்கார் மேளாக்கள் நடத்தப்பட்டு மத்திய அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் வேலை வழங்கும் இலக்கு எய்தப்படும்.
எனவே வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலிலும் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பங்கேற்றவர்கள்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார், என் மண் என் மக்கள் யாத்திரை நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் காந்தி, மாவட்ட பொதுச் செயலாளர் சுபாஷ் , மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன்,மாவட்ட துணைத் தலைவர்கள் வடிவேல், பழனியப்பன், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் பூபதி, மாவட்ட பிறமொழி பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் செல்வராஜ் , பரமத்தி ஒன்றிய தலைவர் அருண், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பத்ம ராஜா,பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், மாவட்ட ,ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.






