search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காட்டில் பெண்கள் உள்பட 5 பேர் கடல் அலையில் சிக்கினர்- மீனவர்கள் போராடி மீட்டனர்
    X

    மண்டைக்காட்டில் பெண்கள் உள்பட 5 பேர் கடல் அலையில் சிக்கினர்- மீனவர்கள் போராடி மீட்டனர்

    • கடலில் தத்தளித்தவர்களின் அபாய குரலை கேட்டு மீனவர்கள் திரும்பி பார்த்தனர்.
    • பலத்த போராட்டத்திற்கு பிறகு 5 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள பொட்டல்குழி பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி (வயது 48). இவரது மனைவி சீமா (47).

    இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் விஜயா (45). இவரது மகள்கள் ஆஷா (22), ஆஷிகா (17). இவர்கள் அனைவருக்கும் குடும்ப கோவில் ஒன்று உள்ளது. அங்கு நடைபெறும் திருவிழாவுக்கு மண்டைக்காடு கடலில் இருந்து புனித நீர் எடுத்துச்செல்வது வழக்கம்.

    தற்போது கோவில் திருவிழா நடைபெற்று வருவதால், இன்று காலை வைகுண்டமணி அவரது மனைவி மற்றும் விஜயா குடும்பத்தினர் புனித நீர் எடுப்பதற்காக மண்டைக் காடு சென்றனர். அவர்கள் முதலில் கடலில் இறங்கி கால் நனைத்தனர்.

    அப்போது ராட்சத அலை எழுந்து வந்தது. இதனை அவர்கள் சரியாக கவனிக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் 5 பேரையும் கடல் அலை வாரி இழுத்துச்சென்றது.

    வைகுண்டமணி, அவரது மனைவி சீமா, விஜயா, அவரது மகள்கள் ஆஷா மற்றும் ஆஷிகா ஆகியோர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டபடியே தண்ணீரில் மூழ்கினர். அப்போது காலை நேரம் என்பதால் அந்த பகுதியில் மீனவர்கள் கரை திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அவர்கள், கடலில் தத்தளித்தவர்களின் அபாய குரலை கேட்டு திரும்பி பார்த்தனர். உடனடியாக கடலில் குதித்து 5 பேரையும் காப்பாற்ற முயன்றனர். பலத்த போராட்டத்திற்கு பிறகு அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் 5 பேரும் அதற்குள் மயங்கிவிட்டனர். இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கும், குளச்சல் கடலோர போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். உடனடியாக மயக்கத்தில் இருந்த 5 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு அவர்கள் சகஜ நிலைக்கு திரும்பினர்.

    சரியான நேரத்தில் 5 பேரையும் கடலில் குதித்து காப்பாற்றிய மீனவர்களை பலரும் பாராட்டினர். மீனவர்கள் கவனிக்காமல் இருந்திருந்தால் கடல் அலையில் 5 பேரும் மூழ்கி பலியாகி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×