search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி
    X

    நாமக்கல் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி

    • கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சீட்டு பணம் செலுத்தியவரிடம் முதிர்வு தொகை வழங்காமல் இழுத்து அடித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டுவலசு பகுதியில் ஒருவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சீட்டு சேர்ந்து மாதந்தோறும் உரிய தொகையை செலுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சீட்டு பணம் செலுத்தியவரிடம் முதிர்வு தொகை வழங்காமல் இழுத்து அடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    எனவே பணம் செலுத்திய பொதுமக்கள் பணத்தை திருப்பி தரக்கோரி அவரிடம் கேட்டபோது பணத்தை திருப்பி தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது .

    இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் அவரிடம் 2 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தோம் . அவர் சுமார் ரூ.1½ கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்யும் நோக்கத்தில் காலம் தாழ்த்தி வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டி வருகிறார் . எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நாங்கள் செலுத்திய பணத்தை மீட்டு தர வேண்டும் என்றனர் .

    இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் அவரை பிடித்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×