search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மே தினம்- தலைவர்கள் வாழ்த்து
    X

    மே தினம்- தலைவர்கள் வாழ்த்து

    • உழைப்பே உயர்வு தரும், மனநிறைவு தரும், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.
    • மே தினத்தின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட மே தினத்தில் சூளுரைப்போம்.

    சென்னை:

    நாளை (மே 1) தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

    உடலினை எந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்கள் வருடத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    உழைப்பே உயர்வு தரும், மனநிறைவு தரும், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில் எனது நெஞ்சார்ந்த மே தின வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:

    1886-ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு 'எட்டு மணி நேர வேலை' கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியதுதான் மே தினம் உருவானதற்கான அடித்தளம். உழைப்பின் உயர்வை நன்கு உணர்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மானிட சமுதாயத்தில் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தினரே முதன்மையானவர்கள் என முழங்கினார்.

    தமிழ்நாட்டில் எட்டு மணி நேர வேலைக்கு ஆபத்து வந்தவுடன் அதற்கு எதிராக குரல் கொடுத்த இயக்கம் எங்கள் இயக்கம்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

    தொழில் வளர்ச்சி குன்றிய நிலையில் ஏற்பட்ட வேலை இழப்பினால் தொழிலாளர்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிற நிலையில் தங்களது உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1-ந் தேதி அமைய வேண்டும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:

    தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்கவும், தொழிலாளர் விரோத போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மே தினத்தில் உறுதி ஏற்போம்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:

    மே தினத்தையொட்டி, தொழிலாளத் தோழர்களின் வருங்கால வாழ்வு சிறக்க இறைவன் துணை நிற்க வேண்டி, த.மா.கா சார்பில் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்:

    நாட்டிலேயே முதன் முறையாக 1923-ஆம் ஆண்டு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சென்னையில் செங்கொடியை உயர்த்தி மே தினத்தை கொண்டாடிய 100-வது ஆண்டு நிறைவுப்பெறுகிறது. 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்ற மே தின முழக்கத்தை பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. மே தினத்தின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட மே தினத்தில் சூளுரைப்போம்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:

    1884 முதல் 1889 வரை உலக அரங்கில் நடைபெற்ற தொழிலாளி வர்க்கத்தின் புரட்சியின் நீட்சிதான் இந்த மே தினம்.

    தொழிலாளர் வர்க்கத்திற்குச் சவால்கள் நிறைந்த இச்சூழலில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி எடுப்போம்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:

    உலகளாவிய பொருளாதாரம், பெரு நிறுவனங்களின் பணி சூழலில் 8 மணி நேர வேலை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட உரிமைகள் தொழிலாளர்களுக்கு தடையின்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதுதான் தொழிலாளர்களுக்கான உண்மையான மே தின கொண்டாட்டமாகும்.

    சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன்:

    வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மே தின நினைவாக அப்போதைய முதலமைச்சர் காமராஜர் சென்னை மெரினா கடற்கரையில் 1959-ம் ஆண்டு உழைப்பாளர் சிலை நிறுவ பாடுபட்டார். சென்னை மெரினாவிலுள்ள உழைப்பாளர் சிலை, இந்திய உழைப்பாளர்களின் வரலாற்று அடையாளமாக இன்றும் திகழ்ந்து வருகிறது.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:

    உழைப்பில்லையேல் உயர்வில்லை, உழைப்பாளிகள் இல்லையேல் உலகில் இயக்கம் இல்லை. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளித்து அவர்கள் வாழ்வு வளம் பெற செய்வது அரசின் கடமை.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன்:

    உலகமெங்கும் வாழும் தொழிலாளர்களின் இன்னல்கள் தீர்ந்து ஒற்றுமையுடனும் ஒருமைபாட்டுட னும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் பங்களிப்பு மகத்தானது இந்த நாளில் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதே போல் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோரும் மே தின வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×