search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் சாலை விதிகளை பின்பற்றாத ஷேர் ஆட்டோக்கள்
    X

    மதுரையில் சாலை விதிகளை பின்பற்றாத ஷேர் ஆட்டோக்கள்

    • மதுரையில் சாலை விதிகளை பின்பற்றாத ஷேர் ஆட்டோக்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.
    • போக்குவரத்திற்கும் இடையூறு செய்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் பொது போக்குவரத்துக்கு அரசு பஸ்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. மதுரை மாநகரில் மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் மாற்று போக்கு வரத்துக்கான தேவை அதிகளவில் உள்ளது. இதனால் பொது மக்கள் ஷேர் ஆட்டோக்களை அதிகளவில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஷேர் ஆட்டோக்களில் செல்வோர் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. நினைத்த இடத்தில் இறங்கிக் கொள்ளலாம் என்ற வசதி இருப்பதால் தான் பொதுமக்களும் ஷேர் ஆட்டோக்கள் நாடி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை நகரில் குறுகிய அளவிலான சாலைகளே அதிகளவில் உள்ளது. இதில் ஷேர் ஆட்டோக்கள் நடுவழியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது.

    குறிப்பாக ஷேர் ஆட்டோக் களில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் அதிகளவில் ஆட்களை ஏற்றிச் செல்வதை சர்வசாதாரணமாக காணலாம். போக்குவரத்து போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை. சாலையில் சென்று கொண்டிருக்கும் போது யாரேனும் பயணி அழைத்தால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் எந்தவித சிக்னலும் இல்லாமல் நிறுத்தி அந்தப் பயணியை ஏற்றுகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்குவது நடக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் தட்டிக்கேட்டால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தகராறு செய்வதும் வாடிக்கையாக உள்ளது. அத்துடன் பல இடங்களில் பயணிகள் இறங்கிய பின்பு கூடுதல் கட்டணம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெரியார் பஸ் நிலையம், காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா நிலையம், கீழவாசல், பைபாஸ் ரோடு, குரு தியேட்டர், தெற்குவாசல், காமராஜர் சாலை, பரவை உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிறுத்தங்களி லேயே நெடுநேரம் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணி களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்கின்றனர்.

    மேலும் சாலை குறுகலாக உள்ள வில்லாபுரம், அவனியாபுரம் சிக்கந்தர் சாவடி, முடக்குசாலை, தெப்பக்குளம் போன்ற பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல இடங்களில் போக்கு வரத்து கண்காணிப்பு மையங்களில் இருந்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தும், அறிவுறுத்தியும் அதனை கண்டு கொள்வதில்லை.

    தற்போது பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களில் இளம் வயதினரே டிரைவராக உள்ளனர். அவர்கள் விதி முறைகள் குறித்த எவ்வித அக்கறையோ, அச்சமோ இல்லாமல் தாறுமாறாக ஆட்டோக்களை இயக்குகின்றனர். மேலும் பயணிகளை ஏற்றுவதற்காக ஒருவரை ஒருவர் முந்திச் செல்கின்றனர்.

    அதிகளவில் பயணிகள் இருக்கும் போது ஆட்டோக்கள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் மிக்க காலை, மாலை வேளைகளில் ஷேர் ஆட்டோக்கள் சாலையை மறித்துச் செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் சிறுவர்கள் ஷேர் ஆட்டோக்களை இயக்கி சவாரி செல்வதாக புகார் எழுந்துள்ளன. எனவே இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இளம் டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிகள், பயணிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×