search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் தொடக்கப்பள்ளி வகுப்புகள் இன்று தொடக்கம்
    X

    மதுரையில் தொடக்கப்பள்ளி வகுப்புகள் இன்று தொடக்கம்

    • மதுரையில் தொடக்கப்பள்ளி வகுப்புகள் இன்று தொடங்கின.
    • ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

    மதுரை

    தமிழ்நாட்டில் வெயில் தாக்கத்தால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பில் தாமதமானது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்ததால் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி வகுப்புகள் கடந்த 12-ந்தேதி தொடங்கின.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் இன்று திறக்கப்பட்டன. அனைத்து பள்ளிகளிலும் காலை 8 மணி முதல் குழந்தைகள் புத்தகப்பையுடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

    பள்ளிக் கூட வாசலில் முன்பு நின்றிருந்த ஆசிரியர்கள், இனிப்புகள் வழங்கியும் மலர் தூவியும் மாணவ-மாணவிகளை இன்முகத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வந்த பெற்றோர்கள், அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் முதல் நாளான இன்றே பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டன.

    தனியார் பள்ளிகளிலும் இன்று முதல் 1-5 தொடக்க வகுப்புகள் தொடங்கியுள்ளது. இன்று முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் முழுவதுமாக செயல்பட தொடங்கி உள்ளதால் மதுரையின் பல்வேறு இடங்களில் காலையில் வாகனங்கள் அதிகளவில் சென்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் பல தனியார் பள்ளிகளில் இன்னும் பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அரசு தரப்பில் இருந்து பாடப் புத்தகங்களை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.

    எனவே உடனடியாக தனியார் பள்ளி மாணவர்களுக்கும் பாட புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×