

அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அண்ணா திடலில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன், அவை தலைவர் பாலசுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், நகர் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் விஜயலட்சுமி முத்தையன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:
தி.மு.க. ஆட்சிக்கு வந்த முதலிலேயே மிகப்பெரிய சவால்களை சந்தித்தது. கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த காலகட்டத்தில் மருத்துவர்கள் கூட நோயாளிகளின் அருகில் செல்ல பயந்த நேரத்தில் முதல்வர் மிகச் சிறப்பாக செயலாற்றி நோயாளிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாற்றிக் காட்டினார்.
அதன்பிறகு கனமழையால் சென்னை மூழ்கிய நேரத்தில் இரவு&பகல் பாராமல் பணிசெய்து தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தினார். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்கள் மீது மிகப்பெரிய கடன் சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
தமிழக அரசின் மிகச்சிறந்த திட்டங்களால் தமிழகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கட்டாயம் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.
தமிழகத்தில் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழக மக்களும் அதனை ஏற்க மாட்டார்கள். ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை அனைவரும் கற்க வேண்டும் என அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது. தமிழகம் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் இதனை எதிர்க்கின்றனர்.
இந்தி தான், ஏக மொழி என்று சொன்னால் தமிழ்நாடு இந்தியாவில் இருக்க வேண்டுமா? என்பதை தி.மு.க. கேள்வி எழுப்பும். இந்தியை தமிழகத்தில் கொண்டு வர முயற்சித்தால் தமிழகம் தனி நாடாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.