

திருமங்கலம்
மதுரை மாவட்டம், திருமங்கலம் என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் சமிக்ஷா. இவரது தந்தை பாதமுத்து ஒய்வுபெற்ற ராணுவவீரர். இவரது தாய் மலர்விழி டி.புதுப்பட்டியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சமிக்ஷா நாமக்கல்லில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.பார்ம் படித்து வருகிறார்.இவருக்கு ஹேமலதா என்ற மூத்த சகோதரியும், சந்தோஷ்குமார் என்ற தம்பியும் உள்ளனர். சிறுவயது முதலே ஓவியத்தில் சாதனை படைக்க விரும்பிய சமிக்ஷா 3-ம் வகுப்பு படிக்கும் போது கலைநயம்மிகுந்த ஓவியங்களை தீட்டி ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார்.
அப்போது பெற்றோரும், ஆசிரியர்களும் கொடுத்த ஊக்கத்தை தொடர்ந்து ஓவிய கலையில் உச்சம் தொட்ட சமிக்ஷா சிலம்பம், கராத்தே கோ-கோ, ஷட்டில்காக், எறிபந்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முறையான பயிற்சி பெற்று போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களையும், கேடயங்களையும் பெற்று வருகிறார்.
மேலும் குறிப்பாக மாநில அளவிலான போட்டிகளிலும், தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கெடுத்து வரும் சமிக்ஷா தற்போது வரை 52 பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்று திருமங்கலம் நகருக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
இவருக்கு லக்னோவை சேர்ந்த அமைப்பின் சார்பில் 2020-ம் ஆண்டின் சிறந்த சாதனை பெண் என்ற விருதினை வழங்கி கவுரவித்து உள்ளது. அதேபோல் நோபிள் உலகசாதனை புத்தகம் சிறந்த சிலம்பாட்ட பெண்மணி எனும் கோல்டன் கிரவுன் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.
இதுபற்றி மாணவி சமிக்ஷா கூறுகையில், பெற்றோரின் ஆக்கமும் ஊக்கமுமே இத்தனை பதக்கங்களையும், கேடயங்களையும், சான்றி தழ்களையும் குவித்திட உதவியதாகவும், அதே போல் காஞ்சீபுரம் மாவட்ட நூலக ஆய்வாளர் இளங்கோ, திருமங்கலம் கிளை நூலகர் மலர்விழி ஆகியோர் தனக்கு வழிகாட்டியாக இருந்து பல்வேறு உதவிகளை செய் வதாகவும். அதே சமயம் கல்லூரி படிப்பை முடித்து மருந்து ஆய்வாளராக பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ஒரே சமயத்தில் ஓவியம், சிலம்பம், கராத்தே என பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்துவரும் திருமங்கலம் சுல்லூரி மாணவி சமிக்ஷாவுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.