என் மலர்
உள்ளூர் செய்திகள்

சரக்கு வாகனம் மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரக்கு வாகனம் மோதி குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கருமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 27). நேற்று இரவு இவரும், இவரது அண்ணன் மகள் பிரமில் லாஸ்ரீ (7) மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கீதா (29) ஆகிய 3 பேரும் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் மதுரை-தேனி மெயின் ரோட்டில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம், ராஜகுரு ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ராஜகுரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் பிரமில்லாஸ்ரீ, சங்கீதா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செக்கானூரணி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்த ராஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த குழந்தை பிரமி லாஸ்ரீ, சங்கீதாவையும் போலீசார் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதுகுறித்து ராஜகுரு மனைவி கவுசல்யா செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சரக்கு வாகனம் ஓட்டி வந்த டிரைவர் குறவகுடியை சேர்ந்த பாண்டி (43) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சரக்கு வாகனம் மோதி குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






