தென்மேற்கு பருவமழை ஏமாற்றுவதால் 50 அடிக்கும் கீழ் குறைந்த வைகை அணை நீர்மட்டம்

மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் சீராக குறைந்த நீர்மட்டம் இன்று காலை 50 அடிக்கும் கீழ் சரிந்து 49.57 அடியாக உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் விவசாய பணிகளை தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

இதனை நம்பி ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் பயிர்சாகுபடி செய்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் ெதாடங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை இல்லை. மேலும் வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கண்டமனூர் பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்வதால் மூலவைகையாற்றில் தண்ணீர் வரத்து குறைவாகவே உள்ளது.

இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. இருந்தபோதும் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் சீராக குறைந்த நீர்மட்டம் இன்று காலை 50 அடிக்கும் கீழ் சரிந்து 49.57 அடியாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். அணையின் நீர்மட்டம் 64 அடிக்கு மேல் இருந்தால் 58-ம் கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது மிகவும் குறைந்தே நீர்மட்டம் உள்ளது. இதனால் குடிநீ ருக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் விவசாய பணிகளை தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. 404 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.17 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 7.8, தேக்கடி 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com