கால்நடைகளை தொடர்ந்து தாக்கி கொன்று வரும் சிறுத்தை

சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தை ஆய்வு செய்தனர்.கல்குவாரி பகுதியை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டு வருகிறோம்.
கால்நடைகளை தொடர்ந்து தாக்கி கொன்று வரும் சிறுத்தை
Published on

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், ஒசூர் பகுதியில் கடந்த 2 வருடங்களாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, காவல் நாய்களையும் தாக்கி கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசப்பா (42) விவசாயி. 4 மாடுகள், 5 ஆடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் வீட்டின் முன் உள்ள கொட்டகையில் கட்டி வைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார். காலை வந்து பார்த்த போது தனது ஆடு ஒன்று பாதி உடலை தின்ற நிலையில் இறந்து கிடந்து.

இது பற்றி உடனடியாக தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தை ஆய்வு செய்தனர். இதில் கல்குவாரியில் இருந்து வந்த சிறுத்தை ஆட்டை கடித்துக் கொன்றது தெரியவந்தது.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த 2 வருடமாக இங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி இருக்கும் சிறுத்தை அவ்வபோது வெளியே வந்து நாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடு, நாய்களை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

இதனால் கல்குவாரி பகுதியை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டு வருகிறோம். இதுவரை 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை கொன்றுள்ளது. தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com