search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடந்தூர்  அரசு பள்ளி  சீரமைப்பு பணியை ஆய்வு செய்ய வேண்டும் - மலைவாழ் மக்கள் வலியுறுத்தல்
    X

    கோடந்தூர் அரசு பள்ளி சீரமைப்பு பணியை ஆய்வு செய்ய வேண்டும் - மலைவாழ் மக்கள் வலியுறுத்தல்

    • அடிப்படை வசதிகள் அவ்வப்போது பெயரளவுக்கு செய்து தரப்படுகிறது.
    • அடிப்படை வசதிகள் செய்து தராததால் குழந்தைகள் அவதியாக உள்ளது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பாத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்குள்ள கோடந்தூர்,பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு,தளஞ்சி, தளிஞ்சிவயல்,மாவடப்பு, குலிப்பட்டி,குருமலை, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்பு களில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அவ்வப்போது பெயரளவுக்கு செய்து தரப்படுகிறது.

    ஆனாலும் அவை முழுமையாக பூர்த்தி அடைய வில்லை.இதனால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் பின்தங்கியே உள்ளது.மேலும் கல்வி, சாலை வசதி,சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை அத்தியாவசிய தேவைகள் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.இதற்கு அரசு சார்பில் அறிவிக்கப்படுகின்ற திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி அதை பராமரிப்பு செய்யாததே காரணமாகும். அந்த வகையில் மானுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பில் உள்ள தொடக்கப்பள்ளி நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சீரமைக்கப்பட்டு உள்ளது. அந்தப் பணி முறையாக நடைபெறாமல் பெயரளவுக்கு செய்யப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

    சாமானிய மனிதனையும் சரித்திர நாயகனாக மாற்றும் ஆற்றல் கல்விக்கு உள்ளது.அது சமவெளி பரப்புகளில் உள்ள மக்களுக்கு எளிதாக கிடைத்து விடுகிறது.வனப்பகுதியில் பெரும் போராட்டத்திற்கு இடையே கல்வியை கற்க இயலுகிறது. இங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று கல்வியின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவதே சவாலான விஷயமாகும்.இந்த சூழலில் பள்ளியில் சுகாதார வளாகம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததால் குழந்தைகள் அவதிக்கு உள்ளாவதும் தொடர் கதையாக உள்ளது.

    இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் மானுப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பள்ளியில் பழுதுபார்த்தல் மற்றும் வர்ணம் பூசுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.ஆனால் பணி முழுமை மற்றும் தரம் இல்லாமல் பெயரளவுக்கு மட்டுமே செய்து முடிக்கப்பட்டு உள்ளது.வனப்பகுதியில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு ஏற்ற சூழல் இல்லாததால் ஏனோ தானோ என்று முறைகேடான வழியில் அரைகுறையாக செய்யப்பட்டு உள்ளது.இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது.

    எனவே கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பில் உள்ள தொடக்கப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்த்தல் மற்றும் வர்ணம் பூசும் பணியை ஆய்வு செய்து முறைகேடில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மலைவாழ் மக்களுக்கு அரசு அளித்து வருகின்ற திட்டங்கள், வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை முறையாக செயல்படுத்த ப்படுகிறதா என்று அவ்வ ப்போது ஆய்வு செய்ய வேண்டும். இதனால் அவர்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்றார்.

    Next Story
    ×