கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி விழா

திரளான பெண் பக்தர்கள் தரிசனம்காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும், நிவேத்திய பூஜையும் நடந்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி விழா
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டா டப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும், நிவேத்திய பூஜையும் நடந்தது.

அதன்பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் காணிக்கையாக வழங்கிய தங்கக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடக்கிறது.

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, மல்லிகை, துளசி, தெத்தி, தாமரை, உள்பட பல வகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மா சனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com