search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருஞ்சாணி அணை 62 அடி எட்டியது
    X

    பெருஞ்சாணி அணை 62 அடி எட்டியது

    • அணைகளுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது
    • மழை குறைந்துள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை யின் காரணமாக பாசன குளங்கள் கிடு கிடுவென நிரம்பி வருகிறது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. தற்பொழுது மழை குறைந்துள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 33.49 அடியாக இருந்தது. அணைக்கு 992 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.05 அடியாக உள்ளது. அணைக்கு 284 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 80 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.69 அடியாக உள்ளது. அணைக்கு 239 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.79 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 33.46 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 14.10 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தது. சுமார் 300 ஹெக்டேரில் தண்ணீர் மூழ்கி இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்ததையடுத்து அந்த தண்ணீர் வடியத்தொடங்கியது. தற்பொழுது 111 ஹெக்டேரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த பகுதியிலும் தேங்கி இருந்த தண்ணீர் படிப்படியாக வடிந்து வருகிறது.

    தண்ணீர் வடிந்தாலும் ஒரு சில பகுதிகளில் நெற்பயிர்கள் முளைத்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மாவட் டம் முழுவதும் ஏற்கனவே 5500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்டது. தற்பொழுது 3500 ஹெக்டேரில் அறுவடை முடிந்திருந்த நிலையில் இன்னும் 1500 ஹெக்டேரில் அறுவடை செய்ய வேண்டியது உள்ளது. மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் அறுவடைக்கு ஒரு மாத காலம் ஆகலாம்.

    கன்னிப்பூ சாகுபடி தாமதமாக தொடங்கியதால் அறுவடை தாமதமாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கன்னிப்பூ அறுவடை நடைபெற்ற பகுதிகளில் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர். திருப்பதிசாரம் 3-ரக நெல்லை வேளாண் துறை அதிகாரிகள் தங்கு தடை இன்றி வழங்கி வருகிறார்கள். சுசீந்திரம், தேரூர், பூதப்பாண்டி பகுதிகளில் நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அறுவடை செய்யப்படாத பகுதியிலும் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை வேளாண் துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அறுவடை நடைபெற்றவுடன் அந்த பகுதியில் நடவு பணியை மேற்கொள்ள வேறு விளை நிலங்களில் நாற்றுப் பாவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×