ராஜாக்கமங்கலத்தில் பள்ளி மாணவன் ஆற்றில் மூழ்கி பலி

குளிக்க சென்றபோது பரிதாபம்நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பெலிக்ஸ் தத்தளித்துள்ளார்
ராஜாக்கமங்கலத்தில் பள்ளி மாணவன் ஆற்றில் மூழ்கி பலி
Published on

கன்னியாகுமரி :

ராஜாக்கமங்கம் அருகே அனந்தநாடார்குடி பகுதியை சேர்ந்தவர் பிளம்மிங். இவர் மத்திய போலீஸ் படை பிரிவில் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மெர்லின் தங்க ரூபா. இவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்க ளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் பெலிக்ஸ் (வயது 14) நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் பெலிக்ஸ் தனது தம்பி, பெரிக்ஸ் (8), அவரது நண்பர்கள் அபி (12), ரெனிஸ் (10), தாத்தா பால்மணியுடன் ராஜாக்கமங்கலம் துறை அருகே பன்றிவாய்க்கால் ஆறு சேருமிடத்தில் பொழிமுகத்தில் குளிக்க சென்றுள்ளார். பால்மணி கரையிலிருந்து அவர்களை கவனித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழம் அதிகமான பகுதிக்கு பெலிக்ஸ் சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பெலிக்ஸ் தத்தளித்துள்ளார். இதை பார்த்த சக நண்பர் சத்தம் போட்டுள்ளார். அதற்குள் பெலிக்ஸ் தண்ணீரில் மூழ்கினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் தண்ணீரில் மூழ்கிய பெலிக்ஸை மீட்டு கரைக்கு கொண்டு வந்து ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து ராஜாக்கமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார். பள்ளி மாணவன் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com