search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழியில் வடமாநில பெண் அடித்துக் கொலை
    X

    ஆரல்வாய்மொழியில் வடமாநில பெண் அடித்துக் கொலை

    • குடிபோதையில் கணவர் வெறிச்செயல்
    • கொலைக்கு பயன்படுத்திய கம்பை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூர் குளத்தின் அருகே செங்கல்சூளை உள்ளது .

    மிஷின் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்த சசி என்பவர் இந்த செங்கல் சூளையை நடத்தி வருகிறார். இங்கு 4 குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களில் மேற்கு வங்காளம் மாநிலம் போல் பூர் பகுதியைச் சேர்ந்த வசந்தி (வயது 29) என்பவர் கணவர் டெபுராய் மற்றும் 9 வயது மகனுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று அவர்கள் வேலை செய்து விட்டு வீட்டில் படுத்து தூங்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை வசந்தி, தனது வீட்டில் காயங்களோடு பிணமாக கிடந்ததை அருகில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். இதுபற்றி அவர்கள் செங்கல் சூளை உரிமையாளர் சசிக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் சம்பவ இடம் வந்து பார்த்து விட்டு, ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் வசந்தியின் உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டதால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்குஅனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து டெபுராயிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அவரது 9 வயது மகனிடம் விசாரித்த போது, இரவில் மது அருந்தி விட்டு வந்த டெபுராய்க்கும், வசந்திக்கும் தகராறு ஏற்பட்டதும், இதில் ஆத்திரம் அடைந்த டெபுராய் கம்பால் வசந்தியை சரமாரியாக தாக்கியதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து டெபுராயை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு வசந்தி, 3-வது மனைவி என்பதும் வசந்திக்கு, டெபுராய் 2-வது கணவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் 9 வயது மகன், வசந்தியின் முதல் கணவருக்கு பிறந்தவர் என்பதும் தெரியவந்தது. கடந்த 4 மாதத்திற்கு முன்பு தான் டெபுராய், குடும்பத்துடன் செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில் தான் தற்போது அவர் மனைவியை கொலை செய்துள்ளார். கொலைக்கு பயன்படுத்திய கம்பை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வசந்தியின் உடலில் பல்லால் கடித்த காயங்களும் இருப்பதாக தெரிகிறது. எனவே டெபுராய் குடிபோதையில் மனைவியை கடித்தாரா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுபற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×