search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருச்சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் - கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு
    X

    இருச்சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் - கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு

    • கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்
    • மித வேகத்துடன் செல்ல வேண்டும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட நாகர்கோவில் மீனாட்சிபுரம் விரைவு பேருந்து நிலையம் அருகில் தலைக்கவசம் அணிவது குறித்து கலைக்குழு மூலம் விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார்.

    விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக இருசக்கர வாகன விபத்துக்கள் மாவட்டத்தில் அதிகமாக உள்ளதால், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதோடு, 2 நபர்கள் மட்டுமே இரு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டுமென போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் 18 வயது பூர்த்தியாகாத எந்த ஒரு நபரும் வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது மித வேகத்துடன் செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் அனைத்துறை அலுவலர்களுடனும் கலந்தாலோசனை மேற்கொண்டு, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நமது பாரம்பரிய கலை வடிவமான தோல் பாவை கூத்து மூலமாக தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த முத்துச்சந்திரன் குழுவினரின் விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இக்குழுவானது மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதோடு தலைக்கவசம் அணியாதவர்களையும் இந்நிகழ்ச்சியினை பார்க்கும் வகையில் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தினை விபத்தில்லாத மாவட்டமாக மாற்றிடவும், இருச்சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் உட்பட போலீசார், பொது மக்கள், இருச்சக்கர வாகன ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×