search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் இன்று பயங்கர கடல் சீற்றம்
    X

    கன்னியாகுமரியில் இன்று காலை முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. திருவள்ளுவர் சிலை பகுதியில் ஆக்ரோஷமாக எழுந்த அலைகள் பாறைகளில் முட்டி மோதி சிதறுவதை படத்தில் காணலாம் 

    கன்னியாகுமரியில் இன்று பயங்கர கடல் சீற்றம்

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
    • சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இவற்றை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. 3 படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கன்னியாகுமரி கடலில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் கடல் கொந்தளிப்பாகவும் சீற்றமாகவும் காணப்பட்டது. மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் இந்த பகுதியில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோமாக எழும்பி வீசின.

    இதனால் இன்று காலை காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன் களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    Next Story
    ×