search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்திற்கு தயாராகும் பக்தர்கள்
    X

    முன்சிறை சிவன் கோவில் 

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்திற்கு தயாராகும் பக்தர்கள்

    • சாலைகளை சீரமைக்க கோரிக்கை
    • மகா சிவராத்திரி நாளில் 12 சிவாலயங்களில் நடையும், ஓட்டமுமாக சென்று சிவனை வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் சிவபெருமானின் அருள் வேண்டி இங்குள்ள 12 சிவாலயங்களில் நடையும், ஓட்டமுமாக சென்று சிவனை வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.

    இதற்காக பக்தர்கள் விரதம் இருந்து முதலில் முன்சிறை பகுதியில் உள்ள திருமலை மஹாதேவர் கோவிலில் குளித்து புத்தாடை கள் அணிந்து விபூதி நெற்றியில் பூசி சாமியை வணங்கி சிவாலய ஓட்டத்தை தொடங்குவார்கள். அதன் பிறகு திக்குறிச்சி மஹாதேவர் கோவிலில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான் குடிமஹாதேவர் கோவில், திருப்பன்னிப்பாகம் மஹாதேவர் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு மஹாதேவர் கோவில், திருவிடைக்கோடு மஹாதேவர் கோவில், திருவிதாங்கோடு மஹாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கரநாராயணர் திருக்கோ வில் ஆகிய 12 சிவாலயங்களில் நடந்தும், ஓட்டமாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் கையில் விசிறியுடன் கோவிந்தா... கோபாலா... என்று கோஷம் போட்டு செல்வார்கள்.

    இந்த வருடம் சிவாலய ஓட்டம் 18-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி காலையில் பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை முடிப்பார்கள். 17-ந் தேதி பிற்பகலில் விரதத்துடன் நடந்தும் ஓட்டமுமாக பக்தர்கள் செல்வார்கள். பக்தர்கள் செல்லும் வழியில் பக்தர்களுக்கு டீ, காப்பி, சுக்கு காப்பி, சுண்டல், கஞ்சி சாப்பாடு போன்றவைகள் ஆங்காங்கே பக்தர்களுக்கு வைத்திருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் குறைந்த அளவில் பக்தர்கள் வந்தனர். ஆனால் தற்போது கொரோனா கட்டுபாடுகள் முழுவதுமாக விலக்கப்பட்டதால் இந்த ஆண்டு பக்தர்கள் நடந்தும் ஓட்டமாகவும், கார், பைக், ஆட்டோ, பஸ்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

    12 சிவாலயங்களுக்கும் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் சாலைகளை சரி செய்து கொடுக்க வேண்டும். முக்கியமாக சில கோவில்களுக்கு செல்லும் சாலைகள் பழுதடைந்து மிக மோசமான சாலைகளாக இருக்கிறது. அவற்றை போர்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சீர்செய்ய வேண்டும் மற்றும் தடையற்ற மின்சாரம், தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×