search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலாஷேத்ரா பாலியல் புகார்- ஹரிபத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி
    X

    கலாஷேத்ரா பாலியல் புகார்- ஹரிபத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி

    • கலாஷேத்ராவில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை இன்று தொடங்கியது.
    • பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னையை அடுத்த திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் பேராசிரியர் ஹரிபத்மன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினர்.

    இதையடுத்து பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபத்மனை கைது செய்தனர்.

    மேலும் 3 பேராசிரியர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை மாணவிகள் கூறியதால் ஹரிபத்மன் உள்பட 4 பேராசிரியர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.

    கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியது. மாணவிகள் எந்தெந்த வகையில் பாலியல் சீண்டலுக்கு ஆளானார்கள் என நேரில் சென்று விசாரணை நடத்தப்பட்டது. கலாஷேத்ரா கல்லூரி முதல்வர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களிடமும் விசாரணை நடந்தது.

    இந்த நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை இன்று தொடங்கியது. போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன், குமார், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கல்லூரி நிர்வாகம் தரப்பில் இன்று தேர்வு நடப்பதால் நாளை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அதனை மனித உரிமைகள் ஆணைய குழுவினர் ஏற்கவில்லை. விசாரணை தாமதம் ஆனால் வழக்கு நீர்த்து போகும் என்பதால் இன்றே விசாரணையை தொடங்கினர்.

    பாதிக்கப்பட்ட மாணவிகள், பேராசிரியர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். பேராசிரியர் ஹரி பத்மன் எவ்வாறெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். அவர் வகுப்பில் படித்த மாணவிகளிடமும் விசாரணை நடந்தது. மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், உதவி ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணை பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் இன்று விசாரணை நடத்திய மாநில மனித உரிமைகள் ஆணையம், மாணவ-மாணவியர்களுக்கு தற்போது தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிந்த பிறகு அடுத்த வாரம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

    இதற்கிடையில் பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது அந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×