

சென்னை:
சட்டசபையில் அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் (தி.மு.க.) பேசும்போது கூறியதாவது:-
அம்பத்தூர் நகராட்சியாக இருந்த போது 2007, 2008-ம் ஆண்டுகளில் மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்ற பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்காக உலக வங்கியிடம் கடன் பெற வீட்டுவரி, வணிகவரி, சொத்துவரி போன்றவை பலமடங்கு உயர்த்தப்பட்டது.
2011-ல் அம்பத்தூர் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு சென்னை மாநகராட்சியின் ஒரு சில மண்டலங்களை தவித்து மற்ற மண்டலங்களில் வசூலிக்கப்படும் வரி விகிதத்துக்கும், அம்பத்தூர் மண்டலத்தில் வசூலிக்கப்படும் வரி விகிதத்துக்கும் பல மடங்கு வித்தியாசம் உள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தற்போது மீண்டும் அனைத்து பகுதியிலும் வரிகளை உயர்த்த அரசு முடிவு எடுத்துள்ளது. அப்படி வரி உயர்த்தும் பட்சத்தில் ஏற்கனவே பல மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ள அம்பத்தூர் பகுதியில் வரியை உயர்த்தாமல் அனைத்து மண்டலங்களிலும் உள்ளது போல் ஒரே சீரான வரியை விதித்து சீரமைக்க வேண்டும்.
அம்பத்தூர் பட்டரை வாக்கம், தொழிற்பேட்டை பகுதியில் விடுபட்ட தெருக்களில் சீராக கழிவு நீர் குழாய் அமைக்க வேண்டும். மாதனாங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற வேண்டும்.
அம்பத்தூர் பெரிய தொழிற்பேட்டை நிறைந்த பகுதியாக உள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். எனவே திருமங்கலம் வரை இயங்கிக்கொண்டிருக்கும் மெட்ரோ ரெயிலை அம்பத்தூர் ஓ.டி.பஸ்நிலையம் வரை நீட்டிப்பு செய்து தர வேண்டும்.
அம்பத்தூரில் ஒரு கலை அறிவியில் கல்லூரி உருவாக்கித்தர வேண்டும். அம்பத்தூரில் இயங்கி வரும் அரசு பள்ளிக்கூடங்களை சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.
அம்பத்தூர் ஏரி, கொரட்டூர் ஏரிகளில் படகு சவாரி, பூங்கா நடைபாதைகளுடன் அமைத்து தர வேண்டும். பாடி முதல் அம்பத்தூர் எல்லை முடிவு வரை சாலையை விரிவுபடுத் துவதுடன் அம்பத்தூர் டி.ஐ.சைக்கிள் தொழிற்பேட்டை அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டும்.
பாடி மேம்பாலம் அருகில் உள்ள ரெயில்வே மேம் பாலம் ரூ.100 கோடி பரப்பில் இருவழிப் பாதையாக 5 வழித்தடமாக அகலப்படுத்தப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.