search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வருகை அதிகரிப்பு- பெட்ரோல் நிலையங்களில் எதிரொலிக்கும் சில்லரை தட்டுப்பாடு
    X

    ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வருகை அதிகரிப்பு- பெட்ரோல் நிலையங்களில் எதிரொலிக்கும் சில்லரை தட்டுப்பாடு

    • பெட்ரோல் பங்குகளில் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்குவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது.
    • சில்லரை தட்டுப்பாடு ஏற்படுவதால் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்கவே யோசனை மேலோங்குகிறது.

    செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி அதிரடியாக வெளியிட்டது. அதன்படி ரூ.2,000 நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும், அதனை வைத்திருப்போர் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் மக்கள் பதற்றத்தின் காரணமாக தற்போதே ரூ.2 ஆயிரம் நோட்டை கண்ணில்படும் இடங்களுக்கெல்லாம் சென்று மாற்ற தொடங்கி வருகிறார்கள். இதில் முன்னணியில் இருப்பது பெட்ரோல் பங்குகள் தான். ஆனால் இப்போது பெட்ரோல் பங்குகளிலும் ரூ.2 ஆயிரம் நோட்டை கண்டால் கோபப்பட தொடங்கிவிட்டார்கள். ஏன்? என்று கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு, விளக்கம் சொல்லியும் தவிக்கிறார்கள்.

    இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி கூறியதாவது:-

    பெட்ரோல் பங்குகளில் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்குவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் ரூ.100-க்கு பெட்ரோல் போட்டுவிட்டு, ரூ.2 ஆயிரம் நோட்டை நீட்டுகிறார். அவருக்கு பாக்கி ரூ.1,900 தர வேண்டியதுள்ளது. இப்படி ஒரு நாளில் 50 பேர் வந்தால் சில்லரைக்கு நாங்கள் எங்கே போவது?

    சில்லரை தட்டுப்பாடு ஏற்படுவதால் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்கவே யோசனை மேலோங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் - பெட்ரோல் பங்க் ஊழியர்களிடையே வாக்குவாதமே ஏற்படுகிறது. வாடிக்கையாளர்களை தவிப்புக்குள்ளாக்குவது எங்கள் நோக்கம் அல்ல.

    இப்போதைய சூழலில் இந்த நடைமுறை சிக்கல்களை போக்க வங்கிகளுக்கு நாங்கள் பணத்தை டெபாசிட் செய்ய போகும்போது, நாங்கள் கேட்கும் தொகைக்கு ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 என்று அவர்கள் சில்லரையாகவும் தர வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இதை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×