search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்
    X

    சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்த ஆசிரியர்களையும், நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டுள்ள காலி பணியிட விவரங்களை பார்வையிடுபவர்களையும் படத்தில் காணலாம்.

    முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்

    • சேலம் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
    • விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்தனர்.

    சேலம்:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் முதற்கட்டமாக 13 ஆயிரத்து 331 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆரம்ப கல்வி பட்டயபடிப்பு, டிப்ளமோ பட்டயப்படிப்பு, பி.எட்., எம்.எட், உள்ளிட்ட பட்டங்களை படித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களாக பணியாற்றுபவர்கள், பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

    விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் குவிந்தனர்.

    இதனால் கல்வி அலுவலகங்களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். கலெக்டர் அலுவலக சுவரிலும், நோட்டீசு போர்டிலும் எந்த எந்த பள்ளிகளில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பது குறித்த பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் அரசு பள்ளிகளின் பெயர் , பாடம், பணியிடங்களின் எண்ணிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

    அவர்கள் அவற்றை பார்த்து எந்த பள்ளியில் பணியாற்ற விருப்பம் என்பதை தேர்வு செய்து, அவர்கள் அங்கேயே அமர்ந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, கல்வி சான்றிதழ், பணி அனுபவ சான்றிதழ், புகைப்படம் போன்றவைகளை இணைத்து அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை (எஸ்.ஜி.டி.)-193, பட்டதாரி (பி.டி.)-130, முதுகலை பட்டதாரி (பி.ஜி.)-43 என மொத்தம் 366 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 366 பணியிடங்களுக்கும் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×