

சென்னை:
சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் உள்ள அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நேற்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த குடியிருப்பு கடந்த 1993-ம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மேலும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்ய தமிழக அரசு நிபுணர் குழுக்களை அமைத்துள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழக நிபுணர்களை உள்ளடக்கிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
25 ஆண்டுகள் பழமையான குடியிருப்புகளை வரும் 31-ஆம் தேதிக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நிபுணர் குழுக்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.