search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்- புதிய கலெக்டர் கார்த்திகேயன் பேட்டி
    X

    நெல்லை மாவட்ட புதிய கலெக்டராக டாக்டர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

    நெல்லை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்- புதிய கலெக்டர் கார்த்திகேயன் பேட்டி

    • நெல்லை மாவட்டத்தின் 218-வது கலெக்டராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டார்.
    • பொதுமக்களின் குறைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த விஷ்ணு, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

    பொறுப்பேற்பு

    இதையடுத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் நெல்லை மாவட்டத்தின் 218-வது கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து இன்று காலை அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக அறையில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், ஆர்.டி.ஓ. சந்திரசேகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாசில்தார்கள் ஆனந்த பிரகாஷ், மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

    அரசு திட்டங்களுக்கு முன்னுரிமை

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரலாற்று சிறப்புமிக்க நெல்லையின் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்டதில் மகிழ்ச்சி. தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்கள் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும். பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது மக்களினுடைய கோரிக்கைகள், கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    இந்த மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    நடவடிக்கை

    மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிகளும் சிறப்பாக நடத்தப்படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பங்கேற்க வரும் பொதுமக்கள் தீக்குளிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதை தடுக்க காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×