search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் தொழில் அதிபர் வீட்டில் தங்க, வைர நகைகள் கொள்ளை- ரூ.4½ லட்சம் ரொக்க பணத்தையும் அள்ளி சென்றனர்
    X

    பெண் தொழில் அதிபர் வீட்டில் தங்க, வைர நகைகள் கொள்ளை- ரூ.4½ லட்சம் ரொக்க பணத்தையும் அள்ளி சென்றனர்

    • கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் கீதா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மஞ்சுளா தேவி (55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செந்தில்குமார் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    தொழில் அதிபரான மஞ்சுளாதேவி கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் தற்போது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். மஞ்சுளா தேவி மட்டும் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் அவ்வப்போது பூந்துறையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று வருவார். மஞ்சுளாதேவியின் வீடு கீழ்த்தளம் மற்றும் முதல் மாடி கொண்ட வீடாக உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மஞ்சுளா தேவி தனது தாயாரை பூந்துறையில் உள்ள அவரது வீட்டில் கொண்டு விட்டுவிட்டு கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டார். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு நேற்று மஞ்சள் தேவி மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதவை திறந்து உள்ளே சென்றபோது வீட்டின் முதல் மாடி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டில் பீரோ இருக்கும் அறைக்கு சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. மேலும் அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த வைரத்தோடு 3 ஜோடி, வைர வளையல் ஒரு ஜோடி, 4 வைர மோதிரம், 7 ஜோடி தங்கத்தோடு, 3 தங்க மோதிரம், 4 தங்க வளையல்கள், 3 தங்க பவள மாலை என மொத்தம் 18 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.4.50 லட்சம் ரொக்க பணமும் திருட்டு போய் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.12 லட்சத்து 54 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு மஞ்சுளாதேவி புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 நபர்கள் உள்ளே வருவது பதிவாகி இருந்தது. ஆனால் அந்த நபர்கள் சி.சி.டி.வி. கேமிராவை திருப்பி வைத்து விட்டதால் சரியாக அடையாளம் தெரியவில்லை.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்டு இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் மஞ்சுளா தேவி பற்றி நன்கு தெரிந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×