search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மகளிர் பள்ளியில் குடிநீர் பற்றாக்குறையால் மாணவிகள் தவிப்பு
    X

    சின்டெக்ஸ் டேங்குகள் மேல் மூடிகள் உடைந்து இருப்பதால் குடிநீரில் அசுத்தம் இருப்பதையும், அதனை கவனிக்காத மாணவிகள் பாட்டிலில் தண்ணீரை நிரப்புவதையும் படத்தில் காணலாம்.

    அரசு மகளிர் பள்ளியில் குடிநீர் பற்றாக்குறையால் மாணவிகள் தவிப்பு

    • குடிநீர் சுத்தகரிப்பு இல்லாமல் இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
    • சின்டெக்ஸ் டேங்குகள் மூடிகள் உடைந்து இருப்பதால் நீர் அசுத்தம் அடைகிறது.

    தருமபுரி,

    தருமபுரி திருப்பத்தூர் சாலையில் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    தனியார் பள்ளிக்கு நிகராக அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளதால் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவிகள் இந்த பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர். 6- ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை புதிய கட்டிடத்திலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் பழைய கட்டிடத்திலும் இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் 11-ம் வகுப்பில் 540 மாணவிகளும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 230 மாணவிகளும் புதியதாக சேர்ந்துள்ளனர். பள்ளியில் தற்பொழுது 3364 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் சுத்தகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட 3 சுத்திகரிப்பு எந்திரங்கள் உள்ளன. அவை தற்போது பழுதாகி ஓரம் கட்டப்பட்டுள்ளது.

    தற்போது பள்ளி திறந்த நிலையில் மாணவிகளுக்கு நகராட்சி சார்பில் 750 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 சின்டெக்ஸ் டேங்குகளில் சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 1500 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.

    சின்டெக்ஸ் டேங்குகள் 2 மேல் மூடிகள் உடைந்து இருப்பதால் குடி தண்ணீரில் பூச்சிகள், இலைகளின் சருகுகள் என குப்பைகள் கலந்து அசுத்தமாக இருக்கிறது. மேலும் 3500-க்கும் மேல் படிக்கும் மாணவிகளுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை 1500 லிட்டர் தண்ணீரை நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. ஒரு நாளைக்கே 1500 லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. நகராட்சி வழங்கும் குடிதண்ணீர் சுத்தகரிப்பு இல்லாமல் இருப்பதால் மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பள்ளி திறப்பதற்கு முன்பே மாணவிகளுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, சுத்தகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யாமல் மெத்தன போக்குடன் பள்ளி கல்வி நிர்வாகம் இருப்பது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை மாணவிகள் விஷயத்தில் மெத்தன போக்குடன் இல்லாமல் உடனடியாக சுத்தகரிக்கப்பட்ட குடிநீரை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×