search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விஜர்சன விழா ஊர்வலம்
    X

    விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட காட்சி.

    தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விஜர்சன விழா ஊர்வலம்

    • தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் காவல்துறையின் அனுமதி பெற்று வைக்கப்பட்ட 85 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.
    • தமிழகத்தின் பாரம்பரிய மேல தாளங்கள் மற்றும் கேரளாவின் செண்டை மேளம் என 12 வகையான மேளங்கள் முழங்க சிலம்பாட்டம், முளைப்பாரிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சன விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி நகரின் முக்கிய சாலைகளின் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் காவல்துறையின் அனுமதி பெற்று வைக்கப்பட்ட 85 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.

    தூத்துக்குடி நகர பகுதியில் இருந்து வரக்கூடிய 74 விநாயகர் சிலைகள், புதுக்கோட்டை பகுதியில் இருந்து வரக்கூடிய விநாயகர் 11 சிலைகள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் உட்பட விநாயகர் சிலைகள் அனைத்தும் திரேஸ்புரம் மற்றும்

    முத்தையாபுரம் வழியாக தூத்துக்குடி புதியதுறைமுகம் கடலில் கரைக்கப்பட்டது.

    முத்தையாபுரம் வழியாக 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு அய்யம்பாண்டி தலைமை தாங்கினார். பா.ஜ.க. தெற்கு மண்டல தலைவர் மாதவன், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் நாராயணராஜ், விநாயகர் ஊர்வல பொறுப்பாளர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி வர்த்தக பிரிவு மாநில துணைத்தலைவர் ஜெகன் கலந்து கொண்டு பேசினார். விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன் தொடங்கி வைத்து பேசினார்.

    தமிழகத்தின் பாரம்பரிய மேல தாளங்கள் மற்றும் கேரளாவின் செண்டை மேளம் என 12 வகையான மேளங்கள் முழங்க சிலம்பாட்டம், முளைப்பாரிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாலசுப்பிரமணியன், ஆறுமுகம் என மூத்த காரியத்தர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் விநாயகர் சிலை கமிட்டி பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் பால்மாணிக்கம், செல்வி, துர்க்கையப்பன், பிரபு முருகேசன், முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் ஆண்கள்- பெண்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விநாயகர் சிலைகள் விஜர்சன விழா மற்றும் ஊர்வலத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்யராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், பிரேம் ஆனந்த், அய்யப்பன், ராஜாராம், சண்முகம், வின்சென்ட் அன்பரசி, செந்தில்குமார், அலெக்ஸ் ராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×