search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் 30 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்- ஸ்மார்ட் கார்டாக வழங்க திட்டம்
    X

    தமிழகத்தில் 30 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்- ஸ்மார்ட் கார்டாக வழங்க திட்டம்

    • கடந்த காலங்களில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டபோது இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
    • கல்வி நிறுவனங்களிடம் இருந்து இலவச பாஸ் கோரிக்கையை பெற்ற பின்னரே பயனாளிகள் இறுதி எண்ணிக்கை தெரியவரும்.

    சென்னை:

    தமிழகத்தில் அக்னி வெயிலின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 7-ந்தேதி 1 முதல் பிளஸ்-2 வரை அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், அரசு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சத்து 14 ஆயிரம் பேர் பயனடையலாம் என கணக்கிட்டுள்ளனர்.

    கடந்த காலங்களில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டபோது இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது சீருடை அணிந்த மாணவர்கள் மற்றும் கல்லூரி அடையாள அட்டைகளை காண்பிக்கும் மாணவர்கள் எந்த தடையும் இல்லாமல் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    இருப்பினும் சில இடங்களில் பஸ்களில் மாணவர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டில் நடுப்பகுதியில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்திலும் பஸ் பாஸ் இல்லாத காரணத்துக்காக மாணவர்கள் யாரும் இறக்கி விடப்படவில்லை.

    நடப்பாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் ஸ்மார்ட் கார்டாக வழங்குவதற்கான பணிகளை முன்னெடுத்து வருவதாக போக்குவரத்து துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும் போது, எல்லா மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிட்டு இருக்கின்றோம். மாணவர்கள் பயணம் செய்யும்போது ஸ்மார்ட் கார்டு எடுத்துச் செல்லுங்கள். கல்வி நிறுவனங்களிடம் இருந்து இலவச பாஸ் கோரிக்கையை பெற்ற பின்னரே பயனாளிகள் இறுதி எண்ணிக்கை தெரியவரும்.

    போக்குவரத்து துறையின் தொழில்நுட்ப கிளையான சாலை போக்குவரத்து நிறுவனம் மாணவர்களுக்கான பஸ் பயண அட்டைகளை வழங்கும் செயல்முறையை தொடங்கியுள்ளது. மேலும் ஸ்மார்ட் கார்டு அச்சிடுவதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    வருகிற ஜூன் அல்லது ஜூலை மாத இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் இருந்தும் பஸ் பாஸ் கோரும் மாணவர்களின் விரிவான விபரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பஸ் அட்டவணை திருத்தம் செய்யப்பட்டு, கூடுதல் பஸ் சேவைக்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    2022-23 ஆம் ஆண்டு இலவச பேருந்து பயணச் சீட்டுகளுக்கான இழப்பீடாக ரூ.1300 கோடியை போக்குவரத்து கழகங்களுக்கு மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் இந்தத் தொகை ரூ.1,500 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×