என் மலர்
உள்ளூர் செய்திகள்

தியாகதுருகத்தில் உரக் கடைகளில் வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி ஆய்வு மேற்கொண்டார்.
தியாகதுருகம் பகுதி உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை
- தியாகதுருகம் பகுதி உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி எச்சரிக்கை விடுத்தாார்.
- அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லரை விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் பகுதியில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையொட்டி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி தியாகதுருகம் பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது முறையாக உர உரிமம் பெற்று விற்பனை செய்யப்படுகிறதா? உரம் இருப்புப் பதிவேட்டில் உள்ளவாறு உரக்கடையில் இருப்பு உள்ளதா? மேலும் விற்பனை முனையக் கருவியில் உள்ளவாறு உரங்கள் இருப்பு சரியாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கடை உரிமையாளர்களிடம் விவசாயிகளுக்கு ரசாயன உரங்களை விற்பனை செய்யும் போது அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லரை விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் கடைகளுக்கு முன்பாக ரசாயன உரங்களின் விலை பட்டியலை வைக்குமாறு அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன், தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநர் சந்துரு, வேளாண்மை அலுவலர் வனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.






