search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

    • காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவலூர் அருகே எலந்தகாடு என்ற கிராமம் உள்ளது. இங்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி செய்து தருவதற்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் குடிநீர் குழாய்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்து விட்டது. இதனால் இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிறுவலூர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனாலும் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் ஒன்று திரண்டு திடீரென சிறுவலூர்-கவுந்தபாடி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது உங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    Next Story
    ×