search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளங்கள் ஆக்கிரமிப்பால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
    X

    குளங்கள் ஆக்கிரமிப்பால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்

    • நேரடி பாசனம் பெறும் விளைநிலங்களின் நீர் நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.
    • ஆக்கிரமிக்கப்பட்டு விவசாய நிலங்களாகவும், வீட்டு மனைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வெளியேறும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த ஏழு குளங்கள் ஏற்படுத்தப்பட்டு பழமை வாய்ந்த பாசன திட்டமாக உள்ளது.இக்குளங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து அரசாணை அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டு குளங்கள் நிரப்பப்படுகின்றன.

    இத்திட்டத்தில் உள்ள ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம், செட்டிக்குளம், தினைக்குளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், வலையபாளையம் குளம் ஆகிய குளங்களின் வாயிலாக 2,786 ஏக்கர் நேரடி பாசனமும், பல ஆயிரம் ஏக்கர் நிலத்தடி நீர் மட்டத்திற்கும் உதவியாக உள்ளது.இக்குளங்களின் நீர்த்தேக்க பரப்பை ஆக்கிரமித்து, பலர் விவசாயம் செய்து வருகின்றனர். இத்தகைய ஆக்கிரமிப்புகளால் நேரடி பாசனம் பெறும் விளைநிலங்களின் நீர் நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.

    நீர் தேக்க பரப்பும் படிப்படியாக குறைந்து கரைகளிலும் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. பருவமழை குறைவு உட்பட காரணங்களால் ஏழு குளங்களில் நிரப்பபடும் தண்ணீரை அடிப்படையாக கொண்டே அப்பகுதியில் கரும்பு, தென்னை உட்பட சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.நீர் தேக்க பரப்பு ஆக்கிரமிக்கப்படுவதால் குளத்தில் தண்ணீர் தேக்கப்படுவது பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் அப்பகுதியில் குறைந்து வருகிறது.இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த 2014ல் 174 ஏக்கர் நீர் தேக்க பரப்புள்ள ஒட்டுக்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர்.

    குளத்தின் நீர்த்தேக்க பரப்பில் ஆக்கிரமித்து நடப்பட்டிருந்த தென்னை மரங்கள் அகற்றப்பட்டன. கடந்த ஆண்டும் சில குளங்களில், ஆக்கிரமிப்பு அகற்ற, முதற்கட்ட பணிகள் துவங்கி கிடப்பில் போடப்பட்டுள்ளது.பழமை வாய்ந்த பாசன திட்டத்தையும், நீர்நிலைகளை பாதுகாக்கவும், அனைத்து குளங்களிலும் பாரபட்சம் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை சார்பில், இப்பணிகளை உடனடியாக துவக்க விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    ஏழு குளங்களுக்கு தளி கால்வாய் வழியாக நீர் செல்கிறது. தளி கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் சுருங்கியுள்ளது. கால்வாயிலிருந்து குளங்களுக்கு நீர் செல்லும் வழித்தடம் பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும் செடி, கொடிகள் முளைத்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது.மேலும் ஒவ்வொரு குளமும் நிரம்பியதும் உபரிநீர் எளிதாக மற்ற குளத்திற்கும், பெரியகுளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்களிலிருந்து உபரி நீர் மதகுகளும், அதன் நீர்வழித்தடமும் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டு விவசாய நிலங்களாகவும், வீட்டுமனைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனால் வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

    எனவே குளங்களின் நீர்வழித்தடங்களையும், வெளியேறும் கட்டமைப்புகளையும் மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×